திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா:அக். 28இல் தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 2ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
இது குறித்து திருக்கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா, நிகழாண்டில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்குகிறது. நவம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு முதல் நாளான அக்டோபர் 28ஆம் தேதி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும், காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படும் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறும். மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறுகின்றன.
2ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.
நவம்பர் 2ஆம் தேதி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நவம்பர் 3ஆம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, அதைத் தொடர்ந்து மற்ற பூஜைகள் நடைபெறும். காலை 5 மணியளவில் தெய்வானை அம்மன் தவசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கோயிலில் வைத்து திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
திருவிழாக் காலங்களில் நாள்தோறும், காலை, மாலை வேளைகளில் திருக்கோயில் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் பக்தி சொற்பொழிவுகள் நடைபெறும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamani