காமராஜர் நகர் காங். வேட்பாளர் மீது தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.ஜான்குமார், தேர்தல் விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக, பாஜக கட்சியினர் புகார் அளித்தனர்.
இதுகுறித்து புதுவை தலைமை தேர்தல் அதிகாரி சுரூவர் சிங்கிடம் புதுவை சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன், பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் செவ்வாய்க்கிழமை அளித்த புகார் மனு விவரம்:
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தல் வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் நிலையில், புதுவை மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டன. ஆனால், இந்த விதிகளை மீறும் வகையில் ஆளும் காங்கிரஸ் கட்சி புதுவை அரசுக்குச் சொந்தமான கம்பன் கலையரங்கில் செப்டம்பர் 6-ஆம் தேதி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியது.
இதில் பங்கேற்கும்படி, புதுவை மாநில அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் அந்தக் கட்சித் தலைவர் ஆ.நமச்சிவாயம் அழைப்பு விடுத்திருந்தார். இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத், புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில், மத்திய பாஜக அரசை வேண்டுமென்றே விமர்சனம் செய்ததோடு, புதுவை காங்கிரஸ் அரசு, காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் ஆகியோருக்கு ஆதரவாகவும் அனைத்துத் தலைவர்களும் பேசியுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, புதுச்சேரி நகரின் மையப் பகுதியில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான கம்பன் கலையரங்கை பயன்படுத்தியிருக்கக் கூடாது. மாவட்டத் தேர்தல் ஆணையரின் கவனத்துக்கு தெரிந்தும் இந்தக் கூட்டம் நடந்திருக்கிறது. எனவே, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரின் வேட்பு மனுவை உடனடியாக தள்ளுபடி செய்து, அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்த புகார் மனுவை புதுதில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணை யருக்கும் அவர்கள் அனுப்பியுள்ளனர்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *