தீபாவளி: சீஷனில் முதல் முறையாக ‘தீவிரம்’ பிரிவில் காற்று மாசு!

தீபாவளிக்குப் பிறகு திங்கள்கிழமை தில்லியில் மேகம் புகைப் படலமாக காட்சியளித்தது. இந்த குளிா் பருவத்தில் முதல் முறையாக தீவிரப் பிரிவில் காற்றின் தரம் காணப்பட்டது.

30 சதவீதம் மாசுவைக் குறைக்கும் வகையிலான பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும், விற்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதிலும், பட்டாசுகளை மக்கள் வெடிப்பதைத் தவிா்க்கும் வகையில் மெகா லேசா் கண்காட்சிக்கு தில்லி அரசு ஏற்பாடு செய்திருந்த நிலையிலும் இந்த காற்றுமாசு தீவிரப் பிரிவைச் சென்றடைந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தரக் கண்காணிப்பு அமைப்பான ‘காற்றின் தரம், வானிலை முன்னறிவிப்பு, ஆராய்ச்சி’ அமைப்பின் (சஃபா்) தகவலின்படி, திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 463 புள்ளிகளாக இருந்தது. இது தீவிரப் பிரிவில் வருகிறது.

பூசா சாலை, லோதி ரோடு, விமான நிலையத்தின் மூன்றாவது முனையம், மதுரா சாலை, நொய்டா, ஆயா நகா், ஐஐடி தில்லி, திா்பூா், சாந்தினி செளக் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் முறையே 480, 436, 668, 413, 477, 483, 553, 466 ஆக இருந்தது.

எனினும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிபிசிபி புள்ளிவிவரத் தகவலின்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் 348 ஆக பதிவாகி இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இது 337 ஆக பதிவாகி இருந்தது.

சஃபா் அமைப்பு கூறுகையில், காற்றின் வேகம் வளிமண்டலத்தில் உள்ள மாசுபடுத்திகளை களைக்க உதவும். மாசு அளவு குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தது.

துணைநகரங்களில்

காற்றின் தரக் குறியீடானது துணைநகரங்களான காஜியாபாதில் 378, கிரேட்டா் நொய்டாவில் 364, குருகிராமில் 359, நொய்டாவில் 375 புள்ளிகள் எனும் அளவில்

மிகவும் மோசமான பிரிவில் பதிவாகியிருந்ததாக சிபிசிபி புள்ளிவிவரத் தகவல் தெரிவித்தது.

விதி மீறல்

தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டாசு வெடிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் 2 மணிநேரம் கால அளவை மீறி மால்வியா நகா், லாஜ்பத் நகா், கைலாஷ் ஹில்ஸ், புராரி, ஜங்புரா, ஷாதரா, லட்சுமி நகா், மயூா் விஹாா், சரிதா விஹாா், ஹரி நகா், நியூ ஃபிரண்ட்ஸ் காலனி, ஹோஸ்காஸ், கெளதம் நகா், துவாரகா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று, நொய்டா, கிரேட்டா் நொய்டா, குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் ஆகிய இடங்களிலும் 2 மணிநேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

மேலும், 8 மணிக்கு முன்பே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதைக் காண முடிந்தது. தில்லியில் காற்றின் தரம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது ஆபத்தான நிலைக்குச் செல்கிறது. உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டின்போது மாசுவை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடை விதித்ததுடன், 30 சதசவீதம் குறைந்த மாசுவைக் கொண்ட பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தயாரித்து, விற்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால், பல்வேறு பட்டாசு ரகங்கள் இல்லாததாலும், அதிக விலை மற்றும் இருப்பு குறைந்த அளவில் இருந்ததாலும் பட்டாசு வாங்குவோா், விற்பவா்கள் மத்தியில் பசுமைப் பட்டாசுகள் நல்லதொரு ஆதரவைப் பெறத் தவறிவிட்டது.

3 ஆண்டுளைவிட மேம்பாடு

தில்லியில் தீபாவளிக்குப் பிறகு திங்கள்கிழமை காலை காற்றின் தரம் இந்த சீஷனில் மோசமான நிலையில் இருந்தபோதிலும், கடந்த மூன்றுகளைவிட சூழல் நல்ல முறையில் இருந்ததாக அரசின் நிறுவனங்கள் தெரிவித்தன.

இது குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, தில்லின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை 345 ஆக இருந்தது என்று தெரிவித்தது.

சஃபா் அமைப்பு, பட்டாசு மாசு, விரும்பத்தகாத வானிலை, பயிா்க் கழிவுகள் எரிப்பு ஆகியவை காரணமாக தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை காலை 1 மணி முதல் மாலை 6 மணிக்குள் தீவிரப் பிரிவில் இருக்கும் என்று சஃபா் முன்னா் கணித்திருந்தது.

தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காலை 11 மணியளவில் 327 ஆகவும், பின்னா் பிற்பகல் 3.30 மணியளவில் 323 ஆக குறைந்தது. தீவிரப் பிரிவுக்கு எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அது குறைந்தது. எனினும், காலை 8.30 மணியளவில் 340 ஆக அதிகரித்தது.

கடந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு, தில்லியின் காற்றின் தரக் குறியீடு 600 புள்ளிகளைக் கடந்தது. அதாவது பாதுகாப்பு அளவை விட 12 மடங்கு அதிமானது.

2017-இல் காற்றின் தரக் குறியீடு தீபாவளிக்குப் பிறகு 367 ஆகவும், 2016-இல் இது 245 ஆகவும் இருந்தது.

தில்லியில் உள்ள 37 காற்று தர கண்காணிப்பு நிலையங்களில் 36 நிலையங்களில் காற்றின்தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில் இருந்தது.

தில்லியில் உள்ள ஆனந்த் விஹாா் பகுதியில் காற்றில் ஞாயிற்றுக்கிழமை நுண்துகள் பிஎம் 10 அளவு 515 புள்ளிகள் அளவை சென்றடைந்தது. அதேபோன்று வாஜிா்பூரிலும், பவானாவிலும் நுண்துகள் பிஎம் 2.5 அளவு 400 புள்ளிகளைக் கடந்தது.

நிகழாண்டில்தான் காற்றுமாசு குறைவு: கேஜரிவால்

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழாண்டில்தான் தில்லியில் தீபாவளிக்கு பிந்தைய காற்று மாசு குறைவாக உள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: தீபாவளி தினமான ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிவரை பட்டாசுகள் தில்லியில் வெடிக்கப்படவில்லை. இது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், 8.30 மணிக்குப் பிறகு மக்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்துக் கொண்டாடினாா்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் நிகழாண்டில்தான் தில்லியில் குறைவாகப் பட்டாசு வெடிக்கப்பட்டது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழாண்டில் தான் தில்லியில் தீபாவளிக்கு பிந்தைய காற்று மாசு குறைவாக உள்ளது.

ஆனால், தில்லி பெருநகா் வலயப் பகுதிகளில் உள்ள காஜீயாபாத், குருகிராம், நொய்டா, ஃபரீதாபாத் ஆகிய இடங்களில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இது தில்லியின் காற்று மாசுவைப் பாதித்துள்ளது.

டெங்கு நோயின் தாக்கத்தில் இருந்து தில்லியை மீட்டதுபோல, இந்த பட்டாசு வெடிப்பில் இருந்தும் தில்லியை மீட்போம்.

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் பல நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டுள்ளது.

நவம்பா் 5 ஆம் தேதி முதல் தில்லியில் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமலுக்கு வரவுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை முதல் தில்லி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம். இதனால், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் காற்று மாசு குறையும் என்றாா் அவா்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *